பொன் கோகிலம்

பொன் கோகிலம், ஜூன் 8, 1985-ல் கோலாலம்பூர், பத்துமலையில் பிறந்தார். இவர் தந்தை கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி ஆவார்.

பொன்.கோகிலம் தொடக்கக்கல்வியைப் பத்துமலை தமிழ்ப் பள்ளியில் 1997-ம் ஆண்டு முடித்தார். தாமான் செலாயாங் இடைநிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை பயின்றார். பிறகு, தனியாரில், ஆறாம் படிவத்தைத் தொடர்ந்தார். இந்தியத் தூதரக உபகாரச்சம்பளத்தின் வழியாக, முதுகலைக் கல்வியை சென்னைப் பல்கலைக்கழகத்தில், இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் 2014-ல் முடித்தார்.

மலேசியத் தகவல் அமைச்சின் கீழ் இயங்கும், மலேசிய வானொலியில் 2005-ல் பணியைத் தொடங்கினார். 10 ஆண்டுகளாக மின்னல் பண்பலை அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகப் பணியாற்றினார். மேலும் மின்னல் பண்பலையில், பொன் கோகிலம் 2008-ம் ஆண்டு 'அமுதே தமிழே' இலக்கிய நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக அமர்த்தப்பட்டார். அமுதே தமிழே நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகப் பணியாற்றிய போது எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். மேலும், அந்நிகழ்ச்சி தயாரிப்புப் பணியின்வழி சங்க இலக்கியம், தொல்காப்பியம் போன்ற மரபு இலக்கிய அறிவை மேலும் பெருக்கிக் கொண்டார். கவிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்களின், தொல்காப்பியக் கடலின் ஒரு துளி எனும் நிகழ்ச்சியை வானொலி வழியாக ஒளிபரப்பினார்.

அதுமட்டுமின்றி, வானொலியில் சிறுகதை தயாரிப்பாளராகப் பணியாற்றிய போது பல சிறுகதைகளை தேர்வு செய்து ஒலிபரப்பினார். பிறகு, பல இளம் எழுத்தாளர்களை அடையாளங்கண்டு வானொலியில் அறிமுகம் செய்தார். சிறுகதை எழுத்தாளர்கள் பலர் இதனால் வானொலி வழி பரவலாக அறியப்பட்டனர். பி.எம். மூர்த்தி அவர்களின் முயற்சியில், 'என் நன்றிக்குரிய ஆசிரியர்' எனும் நூலின் தொகுப்பாளராக 2012-ல் பணியாற்றினார்.

தொடர்ந்து, இவர் 2020-ல் 'அகிலம் நீ' எனும் தலைப்பிலேயே தனது முதல் சிறுகதை நூலை வெளியிட்டார். 2018-ம் ஆண்டு 'அகிலம் நீ' யுவதிகள் அமைப்பை தொடங்கினார். இளைஞர்களிடையே படைப்பூக்கத்தை மேலோங்கச் செய்யவும் அவர்களின் படைப்புகளை நூலாக வெளிக்கொண்டு வரவும் பொன் கோகிலம் இயல் பதிப்பகத்தை 2020-லும் மலேசிய இயல் எழுத்தாளர் மன்றத்தை 2021-லும் நிறுவினார். இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டுதலும் இலக்கிய பயிற்சிகளும் வழங்குவதை முதன்மை நோக்கமாக கொண்ட இவ்வமைப்புகள் இளைஞர்களின் முதல் நூலை இலவசமாக வெளியீடு செய்யும் நோக்கத்தையும் கொண்டுள்ளன. இயல் பதிப்பகம் 2022-ல் முதல் ஐந்து புதுமுக எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டது. மேலும், இயல் மன்றத்தின் வழியாக இளம் எழுத்தாளர்களின் 8 கவிதை நூல்கள் கடந்த 2025-ஆம் ஆண்டு வெளியீடு கண்டது.